அமெரிக்க விஞ்ஞானிகள் கணிப்பதற்கு முன்பாகவே, நேபாள நாட்டில் ஏற்படப்போகும் வெள்ளப் பேரழிவு குறித்துத் தான் முன்கூட்டியே கணித்து எச்சரித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மூவர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து தான் பேசி வந்த கருத்துகள் இப்போது உண்மை என நிரூபணமாகி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேடையில் பேசிய சீமான், “நான் போதிக்கும் போது யாருக்கும் புரியாது; ஆனால் அதன் பாதிப்பு வரும் போதுதான் எனது பேச்சின் அருமை புரியும் எனப் பலமுறை கூறியிருக்கிறேன்” என உருக்கமாகப் பேசினார். மேலும், நேபாள நாட்டில் ஏற்படப்போகும் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்துத் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துப் பேசிய பழைய வீடியோக்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் புதிதாக எதையும் கண்டுபிடித்துப் பேசவில்லை என்றும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தனது புத்தகங்களில் எழுதியிருந்த ஆழமான கருத்துகளைப் படித்துவிட்டுத்தான் தெருத்தெருவாகச் சென்று மக்கள் மத்தியில் கத்தியதாகத் தெரிவித்தார். சீமானின் இந்த அதிரடியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு தற்போது நாம் தமிழர் கட்சியினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
