ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த பைக் ஓட்டுநர் ஒருவர், அங்கு காரில் வந்த குடும்பத்தினரின் துரித நடவடிக்கையால் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரின் பலமான அடிசல் காரணமாக அந்த நபர் நிலைதடுமாறி நடுவழியில் மாட்டிக்கொண்டார். இதைக் கண்ட அந்த வழியே சென்ற குடும்பத்தினர் உடனடியாகத் தங்கள் வாகனத்தை நிறுத்திக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
📍 Chamba — A family travelling in their vehicle noticed a biker struggling for his life, stuck at the edge of the road with his bike, and immediately stepped in to help.
The video is reportedly from the Banikhet side.
The monsoon in the hills can turn dangerous within moments.… pic.twitter.com/Gp1JomReko
— The Modern Himachal (@themodernhp) August 31, 2026
தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் தனியாக அந்த நபரை நெருங்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் உடன் பயணித்த புதுமணப் பெண் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, தான் அணிந்திருந்த துப்பட்டாவை ஒரு உயிர்காக்கும் கயிற்றைப் போல நீட்டி அந்த பைக்கரை அதைப் பிடித்துக்கொள்ளுமாறு உதவினார்.
துப்பட்டாவின் உதவியுடன் போராடி வந்த அவர், மற்றவர்களின் கூட்டு முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டார்.
இந்த நெகிழ்ச்சியான மீட்பு நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தப் பகுதியில் தொடர் மழையின் காரணமாகக் கொட்லா-உராய் சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுப் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
