ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான கதுவாவில், காலில் பாகிஸ்தான் மொபைல் எண் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்த புறா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கதுவாவின் சான் கத்ரியான் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் இந்தப் புறா இருப்பதை உள்ளூர் கிராமவாசி ஒருவர் கண்டறிந்து, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் அந்தப் புறாவைக் கைப்பற்றிப் பரிசோதித்ததில், அதன் காலில் இருந்த மோதிரத்தில் பாகிஸ்தானின் ஜாஸ் நெட்வொர்க்கைச் சேர்ந்த ‘03001717652’ என்ற மொபைல் எண் பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்தப் புறா சர்வதேச எல்லையைக் கடந்து உளவு பார்க்க அனுப்பப்பட்டதா அல்லது எல்லைப் பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் புறாப் பந்தயத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், அந்தப் புறாவிடம் இருந்து அந்த மோதிரத்தைத் தவிர வேறு எந்தச் சந்தேகத்திற்குரிய பொருட்களோ அல்லது சாதனங்களோ கண்டெடுக்கப்படவில்லை.
கதுவா பகுதி சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்திருப்பதாலும், சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் இந்தச் சம்பவம் பாதுகாப்புப் படைகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்சமயம் ஜம்மு எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் உச்சகட்ட எச்சரிக்கையுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
A pigeon bearing a ring with what appears to be a Pakistani mobile number was recovered from a border village in Hiranagar sector of Kathua district, triggering a security inquiry. pic.twitter.com/dIxarpBCfs — M S Nazki Journalist (@m_nazki) August 31, 2026 “>
இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கடந்த 2020 மே மாதத்தில் கதுவாவின் ஹிரானகர் பகுதியில் காலில் குறியீட்டு வளையம் அணிந்த புறா ஒன்று பிடிக்கப்பட்டு, விசாரணையில் எந்தவொரு சட்டவிரோத ஆதாரமும் கிடைக்காததால் பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
