காவல் துறையில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய கனவோடு தன் உடலைத் தகுதிப்படுத்திக் கொண்டு வந்த 22 வயது இளம் வாலிபர் ஒருவரின் வாழ்க்கை, எதிர்பாராத மாரடைப்பால் பாதியிலேயே பரிதாபமாக முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மைசால் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், சிறுவயதிலிருந்தே காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற தீவிர லட்சியத்தைக் கொண்டிருந்தார்.

மேலும் அதற்காகத் தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஓட்டப்பந்தயப் பயிற்சிகளில் ஈடுபடுவதும் அவரது வழக்கமாக இருந்துள்ளது. தனது உடல் தகுதியை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, அருகில் உள்ள மலையில் உள்ள படிக்கட்டுகளில் வேகமாக ஏறி இறங்கும் தீவிர பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மலையேற்றப் பயிற்சியின் போது வழக்கம்போல உற்சாகத்துடன் படிகளை நோக்கி ஓடிய அந்த இளைஞருக்கு, எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கடுமையான வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. வலியால் தாங்க முடியாமல் படிகளிலேயே அவர் சுருண்டு விழுந்ததைக் கண்டு, உடன் வந்த நண்பர்களும் சுற்றியிருந்தவர்களும் பதறியடித்துக்கொண்டு அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது என்றும், தீவிர உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட கடுமையான மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

காவல் துறை சீருடை அணிய வேண்டும் என்ற லட்சியக் கனவு கைக்கெட்டும் தூரத்தில் இருந்த வேளையில், 22 வயதேயான ஒரு துடிப்பான இளைஞனின் உயிர் இப்படித் திடீர் மாரடைப்பால் பறிபோன சம்பவம், அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் ஈடுசெய்ய முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே நேரும் இதுபோன்ற மாரடைப்புச் சம்பவங்கள் இன்றைக்குச் சமூகத்தில் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.