தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக், தனது மனைவி முஷால் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண உறவில் இருந்து மனைவியை விடுவிப்பதாக யாசின் மாலிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பயங்கரவாத நிதியுதவி வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரது இந்த முடிவு தற்போது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முஷால் மாலிக், யாசின் மாலிக்கின் மனைவியாக உள்ளார். இருவருக்கும் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது முஷால் மாலிக் பாகிஸ்தானில் வசித்து வரும் நிலையில், யாசின் மாலிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், தனது எதிர்கால நிலை குறித்து யாசின் மாலிக் மனைவியிடம் முக்கியமான முடிவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, தனது மனைவி தனது திருமண உறவின் காரணமாக எந்தவிதமான சிக்கல்களையும் எதிர்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனது நிலைமை காரணமாக மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக திருமண உறவில் இருந்து அவரை விடுவிப்பதாக யாசின் மாலிக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாசின் மாலிக்கின் இந்த முடிவு குறித்து அவரது மனைவி முஷால் மாலிக்கின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான விரிவான விளக்கம் வெளியாகவில்லை. இதனால், விவாகரத்துக்கான உண்மையான காரணம் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக் தொடர்பான இந்த புதிய தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
