தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேற்று காலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தந்தார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வரவேற்பு அளித்து காலை விருந்தளித்தார்.
இந்த முக்கியச் சந்திப்பின்போது பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பு, கூட்டணி உறவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
சந்திப்பிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல் கூறியதாவது: “தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் குடும்ப ஆட்சியில் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்வது ஒன்றுதான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் இத்தகைய மக்கள் விரோத அரசை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.”
தேசியத்திற்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து பேசி வரும் உதயநிதி ஸ்டாலினை, உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது நீண்டகால பழைய நண்பர். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது” என்று குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக, அ.தி.மு.க. – பா.ஜ.க. தலைவர்கள் ஒரே இடத்தில் திரண்டு தி.மு.க. அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
