தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தாமாக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழர் தேசம் கட்சி திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்ட போதிலும் தங்களது கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை எனக் கூறிய தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து பல கட்சிகள் இணைந்து வருவது 2026 தேர்தலில் அந்த கட்சியின் பெரும்பான்மையையும் பலத்தையும் நிரூபித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.