திமுக கூட்டணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்இதற்கு மிகவும் ஆக்ரோஷமாகப் பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “கம்யூனிஸ்ட் தோழர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
அவர்களுக்குத் திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசியலில் பலமுறை நட்புடன் இருந்து, பின்னர் பிரிந்து சென்ற வரலாறு நமக்கு உண்டு. தற்போது கூட்டணி இல்லை என்று அவர்கள் கூறியிருப்பது ஒரு தற்காலிக சூழல் தான், எப்போதும் இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து கூட்டணியின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “உடன் இருந்தால் அவர்களுடன் பயணிப்போம், இல்லாவிட்டால் அவர்கள் இல்லாமல் தனித்துச் செல்வோம், ஒருவேளை எங்களை எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களத்தில் துணிச்சலாக நிற்போம்.
ஒரே நாளில் அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மனசங்கடம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்களிடமே தான் கேட்க வேண்டும். அவர்கள் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக எதற்கும் கவலைப்படாது. தனித்து நின்றாலும் திமுகவுக்கு என்று தனிப்பெரும் பலம் உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என அதிரடியாக முழக்கமிட்டுள்ளார்.
