தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “திமுக கூட்டணி என்பது தேர்தலுக்குப் பின்பு இல்லை” என்று கூறிய கருத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனை பயங்கர கடுப்பாக்கியுள்ளது.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆவேசமாகப் பேசிய ஈஸ்வரன், “உங்களுக்கு விருப்பமில்லை என்றால் சிபிஎம் கூட்டணியில் இல்லை என்று சொல்லுங்கள், அதை விடுத்து ஒட்டுமொத்த திமுக கூட்டணியே இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் எல்லாம் இந்த கூட்டணியில் இல்லையா?” என சண்முகத்தை வறுத்தெடுத்துள்ளார்.

மேலும் விசிக தலைவர் திருமாவளவனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “இரண்டே எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்,

இரண்டு நாட்களாகக் கதவைத் திறந்து வைத்து காத்துக்கொண்டிருந்தார்” என்றும், வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல், “கடைசி மூச்சு வரை ஸ்டாலினுடன் இருப்பேன் என்று கூறிவிட்டு, இப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறுகிறார், என்ன அநியாயம் இது!” என்றும் காரசாரமாகச் சாடியுள்ளார்.

இவர்களை எல்லாம் பெருந்தன்மையுடன் அரவணைத்துச் சென்ற திமுக தலைவருக்கே இது ஒரு நல்ல பாடம் என்று ஈஸ்வரன் பேசிய இந்த அதிரடி பேச்சு, தற்போது திமுகவினரால் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாக்கப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.