இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நாடு முன்னேறி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், காரின் பெட்ரோல் டேங்க் மூடியின் அருகே ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எத்தனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுவதால், E20 (20% எத்தனால், 80% பெட்ரோல்) காரணி கொண்ட இந்த எரிபொருளில் சர்க்கரையின் இனிப்புத் தன்மை எஞ்சியிருக்கிறது என்றும், அதனால் தான் எறும்புகள் பெட்ரோலை நோக்கி வருகின்றன என்றும் நெட்டிசன்கள் பலரும் புதிய வதந்தி ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர்.
Is this nature telling you how much sugarcane juice is in your petrol nowadays?
(Video from Sikkim) pic.twitter.com/JR9HQPDFur
— Kapil (@kapsology) June 14, 2026
ஆனால், தீவிர ஆய்வுக்குப் பிறகு இந்தத் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் திசைதிருப்பக்கூடியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரும்பு மற்றும் சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவிலான எரிபொருள் சுத்திகரிப்பு செயல்முறைக்கு பிறகு அதில் சர்க்கரையோ அல்லது இனிப்புத் தன்மையோ சிறிதும் எஞ்சியிருக்காது. எறும்புகள் எத்தனாலை உண்பதற்காக நேரடியாக ஈர்க்கப்படுகின்றன என்பதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. பழங்கள் அழுகும் போது ஏற்படும் நொதித்தல் போன்ற ஒருவித வாசனையை எத்தனால் கொண்டிருப்பதால், அந்த வாசனை சில பூச்சிகளை ஈர்க்கக் கூடும். மேலும், காரின் பெட்ரோல் மூடிக்கு அருகே கசியும் எரிபொருள் ஆவி, அங்குள்ள தூசி மற்றும் ஈரப்பதம் காரணமாகவே எறும்புகள் கூடியிருக்கலாம் என்பதால், “பெட்ரோல் இனிப்பாக இருப்பதால் எறும்புகள் வருகின்றன” என்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
