தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது இந்த சக்தி ஸ்தலத்திற்குச் செல்வது அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளும் ஒரே வடிவமாக அருள் பாலிக்கின்றனர். ஆதிசங்கரர் விக்கிரகத்தையும் ஸ்ரீசக்கர பீடத்தையும் பிரதிஷ்டை செய்த பெருமை மிக்க இந்த ஆலயம், பதவிகளின் உச்சத்தையும், நினைத்த காரியங்களில் வெற்றியையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாழ்வோடு இக்கோவிலுக்கு மிக முக்கியத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர் தனது அரசியல் சவால்களை வெல்ல இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததோடு, அம்பாளுக்கு ஒரு கிலோ எடையில் தங்க வாள் ஒன்றையும் காணிக்கையாக வழங்கினார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் தனது இழந்த பதவியை மீட்க இங்கு வந்து ‘சண்டி யாகம்’ நடத்தி, மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் என்பது வரலாறு.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அமிதாப்பச்சன், மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சூர்யா-ஜோதிகா தம்பதி எனப் பல சினிமா பிரபலங்களும் அடிக்கடி வந்து வழிபடும் இந்தத் தலத்திற்குத் தற்போது முதல்வர் விஜய் மேற்கொள்ளும் பயணம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
