அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, உலகையே உலுக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எதிரி நாடுகளை நடுங்க வைக்கும் அமெரிக்க விமானப் படையின் மிக சக்திவாய்ந்த ‘B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ்’ (B-52 Stratofortress) ரக குண்டுவீச்சு விமானம், கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து பயங்கரமாக நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த போயிங் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலைவனப் பகுதியில் நடந்த இந்த விபத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. கால்பந்து மைதானம் அளவிலான பெரிய பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதும், கரும்புகை சூழ்ந்திருப்பதும் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது. விபத்தையடுத்து எட்வர்ட்ஸ் விமானத் தளம் உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட, அமெரிக்காவின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படும் இந்த B-52 விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை; இதுகுறித்து அவசர மீட்புக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.