வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது மகன், வீட்டில் இருந்த இட்லி தட்டை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அச்சிறுவனின் வலது கை மோதிர விரல், இட்லி தட்டில் உள்ள சிறிய துளைக்குள் நுழைந்து பலமாகச் சிக்கிக் கொண்டது. விரலை வெளியே எடுக்க முடியாமல் சிறுவன் வலியால் அலறித் துடித்ததைக் கண்டு பதறிய பெற்றோர், நீண்ட நேரம் முயன்றும் விரலை மீட்க முடியாததால், உடனடியாக முத்தியால்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள், சிறுவனின் விரலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மிகவும் எச்சரிக்கையுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரும்பு வெட்டும் நவீனக் கருவிகளின உதவியுடன், சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இட்லி தட்டின் துளையை மிகத் துல்லியமாக வெட்டி எடுத்து, சிறுவனின் விரலை எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான நற்செயலைப் பாராட்டிய சிறுவனின் பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.