கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமிகளில் ஒருவரான காயத்ரி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் மனக் காயங்களைத் தாண்டி, தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் படித்து வந்த அவர், அண்மையில் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் விரைவில் ‘துணை ஆட்சியர்’ என்ற மிக உயரிய பதவியில் அமர உள்ளார். சிறு வயதில் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த ஒரு பெண், இன்று அத்தனை தடைகளையும் உடைத்து ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கும் உயர் அதிகாரி நிலைக்கு உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் முன்மாதிரியாகவும், நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. தனது இந்த சாதனை குறித்துப் பேசிய காயத்ரி, தங்களைப் போன்ற எளிய மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூகப் பணிகளுக்கும் நேர்மையுடன் உழைப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
