இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் பதற்றத்தைத் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, தற்போது விண்வெளியில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ரகசிய உளவுப் போர் தொடங்கியுள்ளது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாடு, சீனாவின் முழு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் கடந்த 16 மாதங்களில் மட்டும் 6 அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, இந்திய எல்லையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘சுபர்கோ’ 1961-இல் தொடங்கப்பட்டதில் இருந்து, பல தசாப்தங்களாக மிகக் குறைந்த செயற்கைக்கோள்களையே ஏவியிருந்தது. ஆனால், கடந்த ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2026 வரையிலான குறுகிய காலத்திற்குள் 6 புதிய செயற்கைக்கோள்களை ஏவி, தனது விண்வெளி உளவு கட்டமைப்பை பல மடங்காக வேகப்படுத்தியுள்ளது.இந்தச் செயற்கைக்கோள் கட்டமைப்பு, இந்திய நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகப் படம் பிடித்து, ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை துல்லியமான ராணுவத் தரவுகளைப் பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.
குறிப்பாக, சமீபத்தில் ஏவப்பட்ட PRSC-EO2 மற்றும் PRSC-EO3 செயற்கைக்கோள்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் படங்களை அதிவேகமாக ஆய்வு செய்து ராணுவத் தகவல்களைத் திரட்டுகின்றன.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘COMSPOC’ நடத்திய ஆய்வில், ஏப்ரல் 2026-ல் ஏவப்பட்ட ‘PRSC-EO3’ செயற்கைக்கோள், உலக நாடுகளைக் கண்காணிப்பதைத் தவிர்த்து, தெற்காசியப் பகுதியை மட்டும் குறிவைத்துச் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் சீனாவின் ராக்கெட்டுகள் மூலமே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த உளவுத் தரவுகள் சீனாவின் ‘யாவோகன்’ உளவு நெட்வொர்க்கிற்கும் நேரடியாகப் பகிரப்படலாம் என இந்தியப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்மறுபுறம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த இரண்டு ஆண்டுகளில் சில வழிசெலுத்தல் மற்றும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், பாகிஸ்தானின் விண்வெளி உளவு விரிவாக்கம் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
