ஐரோப்பிய நாடான நார்வேயில் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஒருவர், அங்குள்ள வேலை கலாச்சாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு, தற்போதைய கார்ப்பரேட் உலகில் “வேலை-வாழ்க்கை சமநிலை” குறித்த மிகப்பெரிய விவாதத்தை உலகளவில் கிளப்பியுள்ளது. இந்தியாவின் அதிவேக, நெருக்கடி மிகுந்த ஓட்டப்பந்தய வேலைச் சூழலையும், நார்வே நாட்டின் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் ஒப்பிட்டு அவர் எழுதியுள்ளார். இந்தியாவில் நீண்ட வேலை நேரம் மற்றும் கடுமையான பணிச்சுமையால் அவதிப்படும் ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் மத்தியில் இந்தப் பதிவு காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

நார்வேயில் மக்கள் தங்களின் பணிப் பொறுப்புகளோடு சேர்த்து, குடும்பத்திற்கான நேரம், வெளிப்புறப் பொழுதுபோக்குகள் மற்றும் தங்களின் மன ஆரோக்கியத்திற்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிப்பதை அந்த ஊழியர் வியப்புடன் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அவரது பதிவில் இடம்பெற்ற “அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நாம் சும்மா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” (They are living life. We are just living) என்ற ஒற்றை வரிக் கருத்து இணையவாசிகளைச் சுண்டியிழுத்துள்ளது. குறைவான வேலை நேரம் மற்றும் தரமான வாழ்க்கை முறையே நார்வே போன்ற  நாடுகள் உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் முதலிடம் பிடிக்கக் காரணம் என்று பலரும் உடன்பட்டாலும், மக்கள் தொகை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு தேசத்திற்குத் தேசம் மாறுபடும் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.