அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “இன்று இரவு ஈரானை மிகக் கொடூரமாகத் தாக்கப் போகிறோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதள பக்கத்தில் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்தையும் அமெரிக்கா ஏற்கனவே மொத்தமாக அடித்துத் துவம்சம் செய்துவிட்டதாகக் கூறியுள்ள டிரம்ப், ஈரானின் ஒட்டுமொத்த ராணுவ பலமும் தற்போது முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஈரானின் மிக முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான ‘கார்க் தீவை’ (Kharg Island) மிக விரைவில் அமெரிக்கா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்றும், வெனிசுலாவில் அமெரிக்காவின் அதிரடித் திட்டம் செம்மையாக ஒர்க் அவுட் ஆனது போல, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களையும் அமெரிக்கா மொத்தமாகக் கைப்பற்றித் தன் வசமாக்கும் என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் மிக முக்கியமான ஒரு தீவைத் தாக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் உலகப் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் சிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.