தன்னுடைய சொந்த உயிரைப் பற்றியும் பொருட்படுத்தாமல், பிறருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகத் துணியும் மனிதநேயப் பண்பே மனிதகுலத்தின் மிகச் சிறந்த அடையாளமாகும். சீனாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்து, உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது.

40 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காக, அந்த வழியாக வந்த ஒரு டெலிவரி பாய் தயங்காமல் பாலத்திலிருந்து கீழே குதித்த வீரம் செறிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய அன்றாட உணவு டெலிவரி வேலையைச் செய்வதற்காகப் பாலத்தைக் கடந்து சென்ற அந்த வாலிபர், பெண் ஒருவர் பாலத்தின் கைப்பிடியைத் தாண்டி ஆற்றில் குதிக்க முயல்வதைக் கண்டு உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தினார்.

அந்தப் பெண் ஆற்றில் குதித்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் தானும் 40 அடி உயரத்தில் இருந்து பாயும் ஆற்று நீரில் குதித்தார். கடும் நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் நீந்திச் சென்று, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பத்திரமாகப் பிடித்துக் கரை சேர்த்தார்.

இந்நிலையில் தனது சொந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு அந்நியப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அந்த டெலிவரி பாயின் துணிச்சலான செயலைப் பாராட்டிச் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த மீட்பு வீடியோ இணையத்தில் லாகக் பரவி வரும் நிலையில், “உண்மையான சூப்பர் ஹீரோக்கள் காமிக்ஸ் புத்தகங்களில் மட்டுமல்ல, நம்மிடையே வாழும் இதுபோன்ற சாதாரண மனிதர்களில்தான் இருக்கிறார்கள்” என நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

“>