தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வலுப்பெற்று வருவதைக் குறிக்கும் வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட முக்கியச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு, மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று வருகை தந்தார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு அளித்து காலை விருந்தளித்தார்.

இந்தச் சந்திப்பில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

“மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும்.” தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து அவர் மேலும் பேசுகையில்:  மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் அமையும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. அனைத்துத் துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வியடைந்துவிட்டது.  தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்த விரிவான அறிக்கையை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.

மேலும் கடந்த சில காலமாகக் கசப்பான நிலையில் இருந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவு, இந்தச் சந்திப்பின் மூலம் மீண்டும் பலமடைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு, வரவிருக்கும் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.