ஒரே நபர் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், தென்னிந்தியத் திரை உலகின் பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு (NBW) பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு குடிமகன் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ள நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் முறைகேடாகத் தன் பெயரில் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வைத்துள்ளதாகப் பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப்குமார் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல்துறையிலும், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இப்புகார்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, அவர் பெங்களூரு 48-ஆவது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கைத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரகாஷ்ராஜுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவருக்கு எதிராக இந்த நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனால் அவர் எந்த நேரத்திலும் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்ற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளதால், சட்ட நிபுணர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
