சப்பாத்தி, பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள மிக அருமையான, சுவையான மற்றும் சத்தான உணவாக காளான் தேங்காய்ப்பால் கிரேவி திகழ்கிறது. இந்த கிரேவி செய்வதற்கு 1 பாக்கெட் பட்டன் காளான், 1 கப் தேங்காய்ப்பால், சிறிது சாம்பார் வெங்காயம், 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 தக்காளி, 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், கசூரி மேத்தி, மல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய பொருட்கள் தேவைப்படும்.
முதலில் காளானை நன்றாகக் கழுவிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மசாலா விழுது அரைப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, குழம்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, சூடு ஆறியதும் தேங்காய் துருவலுடன் சிறிது மிதமான சுடுதண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் லேசாகத் தண்ணீர் தெளித்து வதக்கிய பின், நறுக்கி வைத்துள்ள காளான்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
காளான் மசாலாவோடு சேர்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள 1 கப் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து நன்கு கலந்து, மீண்டும் ஒரு 5 நிமிடங்களுக்குக் கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக மணத்திற்காகக் கரம் மசாலாத்தூள், நறுக்கிய மல்லி இலை மற்றும் கசூரி மேத்தி தூவி நன்றாகக் கலந்து இறக்கினால், நாவூறும் சுவையில் சத்தான காளான் தேங்காய்ப்பால் கிரேவி தயார். இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிச் சூடான சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் பரிமாறினால் மிக அற்புதம்.
