இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இன்றி அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும் 50 முதல் 80 சதவீதம் பேருக்கு மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்த முடியும் என்றும், பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயத்தில் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதற்கட்டமாக ‘டிரெட் மில் டெஸ்ட்’  எனும் பரிசோதனை செய்யப்படுகிறது. உடல் உழைப்பு அல்லது கடினமான வேலைகள் செய்யும்போது இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்கிறதா, நெஞ்சு வலி வருகிறதா என்பதை இந்தச் சோதனை மூலம் கண்டறியலாம். இதில் அடைப்பு இருப்பது தெரியவந்தால், அடுத்தகட்டமாக ‘கொரோனரி ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை செய்து அடைப்பின் தீவிரத்தை உறுதிப்படுத்தலாம்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையின் போது, கையின் மணிக்கட்டு அல்லது தொடையின் தமணி வழியாக மிக மெலிதான ‘கதீட்டர்’ என்ற சோதனைக் கருவியை இதயம் வரை செலுத்தி அடைப்புகள் துல்லியமாகக் கண்டறியப்படுகின்றன. தற்போது கை மணிக்கட்டு வழியாகச் செய்யப்படும் முறையே மிகவும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைபட்டு நோயாளி மயக்க நிலைக்குச் செல்வதை ‘கார்டியோஜெனிக் ஷாக்’ என்று அழைப்பர். இத்தகைய ஆபத்தான சூழலில் ‘ஐ.ஏ.பி.பி’  என்ற அதிநவீன சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் நரம்பு வழியாகச் செலுத்தப்படும் ஒரு சிறப்பு பலூன், இயந்திரத்தின் உதவியுடன் சுருங்கி விரிந்து இதயத்திற்கான ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

இந்த அதிநவீன சிகிச்சையானது இதயம் சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் சீராக இயங்க உதவுகிறது. மிகப்பெரிய மாரடைப்பிலிருந்து உயிரைக் காக்கும் இந்த வசதி பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் இந்தச் சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.