திருப்பூரில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்துவை நோக்கிப் பெண் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காகப் பாடலாசிரியர் வைரமுத்து வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வைரமுத்து விழா அரங்கிற்குள் நுழைய முயன்றபோது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் மனநலம் சரியில்லாத பெண் ஒருவர், திடீரென தனது காலிலிருந்த செருப்பைக் கழற்றி வைரமுத்துவை நோக்கி வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மற்றும் அங்கிருந்தவர்கள், உடனடியாக அந்தப் பெண்ணைச் சூழ்ந்து பிடித்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செருப்பு வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொது இடத்தில் இத்தகைய அத்துமீறல் நடைபெற்றதற்கான உண்மையான பின்னணி என்ன? அவர் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவரா? அல்லது தனிப்பட்ட காரணங்களால் இச்செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே கவிஞர் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
