தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா காய்ச்சல், தமிழகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடும் மூட்டு வலி, தசை வலி, தலைவலி மற்றும் உடல் அசதி ஆகியவற்றை இக்காய்ச்சல் ஏற்படுத்தும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தற்போது சில மாவட்டங்களில் இதன் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட் டுள்ள அறிக்கையின்படி,சென்னை, விழுப்புரம் , செங்கல்பட்டு, தென்காசி, தேனி, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது
இது தொடர்பாகப் பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா பாதிப்புக்கு எனத் தனி வார்டுகளை உடனடியாக அமைக்க வேண்டும். பாதிப்பைக் கண்டறியும் ‘எலிசா’ பரிசோதனைக் கருவிகளைப் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். வீடுகள் தோறும் கொசு உற்பத்தி மற்றும் லார்வா புழுக்கள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் பொருட்கள் மற்றும் தேவையற்ற திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மருத்துவ விரைவுக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய பூச்சியியல் வல்லுநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
