ஐந்து வயது சிறுமி ஒருவர் பிரபல எமிரேட்ஸ் விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் (Cabin Crew) போல உடை அணிந்து, அங்குள்ள பயணிகளுக்கு அதீத உற்சாகத்துடன் சேவை செய்யும் நெஞ்சை அள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் வென்று வருகிறது. ஐலா என்ற அந்த குட்டிப் பெண், விமானப் பணிப்பெண் பாத்திரத்தை மிகவும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொண்டாள்.

ஒட்டுமொத்த பயணத்தின் போதும் அவள் அங்கிருந்த விமானப் பணிப்பெண்களுக்கு உதவுவது, பயணிகளிடம் கனிவாகப் பேசி அவர்களுக்கு என்ன உணவு மற்றும் பானங்கள் வேண்டும் என்று விசாரிப்பது என ஒட்டுமொத்த விமானத்தின் ஸ்டாராகவே மாறிப்போனார். ​சிறுமியின் இந்த மழலைப் பேச்சையும், சுறுசுறுப்பையும் கண்ட சக விமானப் பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் அவளது செயலை மிகவும் ரசித்து, அவளுக்கு ஊக்கமளித்தனர்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிடுகையில், எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணாக தனது மகளின் இரண்டாவது “ஷிப்ட்” இது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகளின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய எமிரேட்ஸ் விமான ஊழியர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார். பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைக்கும் இந்த கியூட் வீடியோ, தற்போது உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.