நாடு முழுவதும் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட பணத்தைச் சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய கும்பல்கள் மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து, அப்பாவி மக்களின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான பண பரிமாற்றங்களை மேற்கொண்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களின் பணத்தைத் தங்களது வங்கி கணக்குகளில் பெறவோ அல்லது பிறருக்கு அனுப்பவோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உடந்தையாக இருப்பது கடுமையான பணமோசடி (Money Laundering) குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுப்பதோடு, வங்கி கணக்கு முடக்கம், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் தீவிரக் கண்காணிப்பு, கைது மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
