தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருக்கு அம்மா உணவகத்தின் சார்பில் தோசை வழங்கப்பட்ட நிலையில், அதனைச் சாப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் தோசை மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டிவிட்டுச் சென்றார். ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில், சட்டமன்ற உறுப்பினர் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஊழியர்கள் வெளியிலிருந்த கடையில் தோசையை வாங்கி வந்து கொடுத்து நாடகமாடியதாகப் பெரும் வதந்திகள் பரவி விவாதத்தைக் கிளப்பியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மா உணவக ஊழியர்கள் ஊடகங்களுக்கு அதிரடி விளக்கமளித்துள்ளனர். தங்களுக்கு எம்.எல்.ஏ வருவது முன்கூட்டியே தெரியாது என்றும், கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் இருந்தே பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து காலையில் தோசை தயாரித்து வழங்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். நேற்று சட்டமன்ற உறுப்பினர் தற்செயலாக ஆய்வுக்கு வந்து சாப்பிடக் கேட்டபோது, உணவகத்தில் தயாராக இருந்த தோசையையே வழங்கியதாகவும், வெளியில் இருந்து வாங்கித் தந்ததாகக் கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
