இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்று, பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகவும், அதே நேரத்தில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாகவும் அமைந்து சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகளைக் கண்டால் மனிதர்கள் அலறியடித்து ஓடும் நிலையில், இந்த காணொளியில் ஒரு நபர் பாம்பை மிகச் சாதாரணமாகப் பிடித்துள்ளார். ஆனால், அந்த நபர் பிடிப்பதற்கு முன்பாகவே, அந்த பாம்பு தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது போலவும், தான் இறந்துவிட்டது போலவும் அசையாமல் நடித்துக் கிடக்கிறது.

​அந்த நபர் பாம்பை அப்படியே போட்டுவிட்டு சற்று தொலைவில் சென்றவுடன், அதுவரை செத்தது போல் நடித்த அந்த பாம்பு, மெதுவாக அங்கிருந்து தப்பித்து நகரத் தொடங்குகிறது. உடனே அந்த நபர் மீண்டும் ஓடிச் சென்று அதன் வாலைப் பிடிக்க, அந்த நொடியே பாம்பு மீண்டும் சட்டென்று செத்தது போன்று தரையில் சுருண்டு விழுந்து நாடகமாடுகிறது. மீண்டும் அந்த நபர் நகர்ந்தால், பாம்பு மீண்டும் தப்பிக்க முயல்கிறது.

இவ்வாறாக அந்த நபர் பிடிக்கும் போதெல்லாம், தப்பிப்பதற்காக ‘நான் செத்துவிட்டேன்’ என்பது போல் பாம்பு காட்டும் இந்த அசாத்திய நடிப்புத் திறமையைக் கண்டு வியந்த நெட்டிசன்கள், “இந்த பாம்பின் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்” என்று நகைச்சுவையாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.