அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டின் போது மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்கத் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இத்தாலியில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள அவர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுத்ததோடு, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இத்தாலியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்த மெலோனி அனுமதி மறுத்துவிட்டதாகவும் டிரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஜார்ஜியா மெலோனி, இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலேயே தான் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். ஒப்பந்தங்களுக்கு உட்பட்டே அமெரிக்க இராணுவத் தளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இறையாண்மை கொண்ட இத்தாலிய நாட்டைப் பாதுகாக்க தான் எடுக்கும் முடிவுகள் டிரம்புக்கு ஒரு பொருட்டல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், தனது செல்வாக்கைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு, டிரம்ப் தனது சொந்த செல்வாக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று மெலோனி கடுமையாகப் பதிலளித்துள்ளார். நட்பு நாடுகளுக்கு எதிராக டிரம்ப் மேற்கொண்டு வரும் இத்தகைய தூண்டுதலற்ற விமர்சனங்கள் அர்த்தமற்றவை என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
