கிழக்கு சீனாவை சேர்ந்த 32 வயதான கு என்ற வாலிபர், திருமண ஏற்பாட்டு மையம் ஒன்றின் மூலமாக வடமேற்கு சீனாவின் 30 வயதுப் பெண்ணை வெறும் ஐந்து நிமிட வீடியோ கால் அழைப்பில் மட்டுமே பார்த்து அவசரமாகத் திருமணம் செய்துகொண்டு, ஒன்பதே நாட்களில் விவாகரத்து கோரியுள்ள விசித்திரச் சம்பவம் சீன சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண் விலை மற்றும் திருமண ஏற்பாட்டுக் கட்டணம் என மொத்தம் 2,65,000 யுவான் (சுமார் 37 லட்சம் ரூபாய்) செலவழித்து, பெண்ணின் பெற்றோரைக் கூட நேரில் சந்திக்காமல் கு வின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

திருமணத்திற்குப் பின் மனைவியின் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, அவருக்குத் தனது முன்னாள் காதலனுடன் தொடர்புடைய 14 லட்சம் ரூபாய் கடனும், கல்லீரல் பாதிப்பும் இருப்பதுடன், திருமண மையம் கொடுத்த பெயரும் அவரது அசல் பெயரும் வெவ்வேறானது என்பதும் அம்பலமாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் 9 நாட்களில் விவாகரத்து கோரிய நிலையில், அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு கணவன் மீது திருப்பி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையே திருமண மையமும் பணத்தைத் திருப்பித் தர மறுத்து வருவதால், அவசரக் கல்யாணங்களால் ஏற்படும் இத்தகைய மோசடிகள் குறித்து நெட்டிசன்கள் தற்பொழுது காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.