புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், புதுச்சேரியைப் பொறுத்தவரை தவெகவிடமிருந்தோ அல்லது உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தோ கூட்டணி குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் வரவில்லை என்று தெரிவித்தார்.

கட்சியில் இளம் ரத்தத்தைப் பாய்ச்சவும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதனை இன்னும் ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் இருந்த திமுக, காங்கிரஸின் நட்பு ரீதியிலான போட்டியால் தான் தோல்வி ஏற்பட்டதாகக் கூறிய கருத்திற்குப் பதிலளித்த கிரிஷ் சோடங்கர், தோல்விக்குப் பல காரணங்கள் இருப்பதாகவும், கடந்த முறை தொகுதி ஒதுக்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களிடம் முறையாகக் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளைப் பாராட்டிய அவர், தமிழக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள சமூகக் கணக்கெடுப்பு ராகுல் காந்தியின் நீண்டகால கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.