தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண் குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மலர்க்கொத்து கொடுத்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
முன்னதாக நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது, தவெக வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டிருந்த அவரது மனைவி ஆகிய இருவரின் வேட்புமனுக்களும் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன. இதனால் எடப்பாடி தொகுதியில் தவெக நேரடியாகப் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைமை எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்குத் தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் அதிமுகவில் இணைந்துள்ளது அப்பகுதி அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் தேர்வின் போது திடீரென அருண்குமார் மாயமான நிலையில் தமிழக வெற்றி கழகம் அவசரமாக அவரது மனைவியை களமிறக்கிய நிலையில் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அப்போதே எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது எடப்பாடி வேட்பாளர் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி தான் அருண்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக நின்றது குறிப்பிடத்தக்கது.
