ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் அந்த ஒப்பந்தம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஏற்க மறுத்து வருவதாலும், போர் நிறுத்தத்தை இரு தரப்பும் தொடர்ந்து மீறுவதாலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நெதன்யாகுவைத் தடுத்து நிறுத்த முடியாத டிரம்ப் நிர்வாகம், இஸ்ரேலியத் தேர்தல்களில் அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக நஃப்தாலி பென்னட்டை ஆதரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கத்தார் அமீரிடம் இருந்து பரிசாகப் பெற்ற சுமார் 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ‘போயிங் 747-8’ ரக விமானம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. ‘பறக்கும் வெள்ளை மாளிகை’ என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர விமானத்தை அதிபரின் பயன்பாட்டிற்குத் தயார் செய்ய அமெரிக்க அரசு மேலும் 3,300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள், மின்னணுப் பாதுகாப்பு மற்றும் அணுத்தாக்குதலிலிருந்து காக்கும் கவசங்கள் எனப் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த விமானத்தில், டிரம்ப் தனது அடுத்தகட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார்.
