முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், குன்னம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன், திடீரென அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஜூன் 26-ஆம் தேதி திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தனது முடிவை அவர் திடீரென மாற்றிக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில், அரசியலில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளேன். குறிப்பாக, ‘கட்சியை மாற்றினால் வீட்டில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிடுவாயா?’ என்று எனது தாய் என்னிடம் கேட்ட கேள்வி என் நெஞ்சத்தை உலுக்கிவிட்டது என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
மேலும் நீண்ட கால அரசியல் பயணத்திற்குப் பிறகு அவர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
