தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையான ரூ.3,000-ஐ, அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு மீண்டும் அரசு கஜானாவுக்கே மணியார்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே  கருத்தப்பிள்ளையூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர், நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கிய ரூ.3,000 ரொக்கப் பணத்தை, சென்னை தலைமைச் செயலகத்திற்கு மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தார்.

இந்தச் செயலுக்கான காரணம் குறித்து கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கினார். அந்தப் பணத்தை எனது குடும்ப அட்டைக்கு உரிய ரேஷன் கடையில் பெற்றுக்கொண்டேன்.

தற்போது தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதை நாம் அறிவோம். எனது வீட்டை நான் எப்படி நேசிக்கிறேனோ, அதுபோலவே எனது நாட்டையும் நேசிக்கிறேன். அரசின் கஜானாவுக்கு எனது பங்களிப்பாக இந்தப் பணம் இருக்கட்டும் என்ற எண்ணத்தில் இதனைத் திருப்பி அனுப்பியுள்ளேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் அரசு இதுபோன்ற தொகைகளை வழங்கும்போது, நிதிச் சுமையைக் கருதி நான் அதனைப் பெற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், நாம் பெற்றுக்கொள்ளாத பணம் முறையாக மீண்டும் அரசு கஜானாவிற்குச் சென்றடையுமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. எனவேதான், இந்த முறை பணத்தைப் பெற்றுக்கொண்டு, நானே நேரடியாக மணியார்டர் மூலம் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.

மேலும் அரசின் நலத்திட்ட உதவியைத் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலன் கருதி மீண்டும் அரசுக்கே வழங்கிய கிறிஸ்டோபரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.