முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தானும் தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கடந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான வெல்லமண்டி நடராஜன், அ.தி.மு.க. பிளவின்போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், ஓ.பி.எஸ். அணியின் முக்கியத் தலைவரான வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அவருடன் வெல்லமண்டி நடராஜனும் தி.மு.க.வுக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் பரவியது.இது குறித்து திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது: “நான் தி.மு.க.வில் இணையப்போவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். நான் திருச்சியில்தான் இருக்கிறேன், எங்கும் ஓடிவிடவில்லை. எனக்கு தி.மு.க.வில் சேரும் எண்ணம் துளியும் இல்லை. நான் எப்போதும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் தொடர்ந்து பயணிப்பேன்.
அவர் எடுக்கும் முடிவுகள் ஆணித்தரமாகவும், நிரந்தரமாகவும் இருக்கும் என நம்புகிறேன். அ.தி.மு.க.வில் 5 முறை மாவட்டச் செயலாளராகவும், 16 ஆண்டுகள் அவைத் தலைவராகவும் பதவி வகித்தவன் நான். தற்போதைய சூழலில் கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. வைத்திலிங்கம் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவில்லை.”
செய்தியாளர்கள் அவரிடம், “அப்படியென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சேரும் எண்ணம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கெல்லாம் இன்னும் நிறைய காலமும், நேரமும் இருக்கிறது. இப்போது அதற்குப் பதில் சொல்ல முடியாது” என்று மழுப்பலாகத் தெரிவித்தார்.
மேலும் வைத்திலிங்கத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியில் அடுத்தடுத்த வெளியேற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெல்லமண்டி நடராஜனின் இந்த விளக்கம் ஓ.பி.எஸ். தரப்புக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
