தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளுக்கிடையே நிலவி வரும் அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். அணியின் தூணாக விளங்கியவருமான வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, தனது மகன் பிரபுவுடன் சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்தத் தொடர் மாற்றங்களின் அடுத்த கட்டமாக, ஓ.பி.எஸ். அணியின் ஜெயலலிதா பேரவை செயலாளரும், குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், தான் தி.மு.க.வில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி நம்மை மீண்டும் சேர்த்துக்கொள்ளாத பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் எங்களிடம் கருத்து கேட்டிருந்தார். இதற்கிடையே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்தச் சூழலில், வைத்திலிங்கம் எங்களை அழைத்து கலந்து ஆலோசித்தார். அதன்படியே அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். வரும் 26-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வைத்திலிங்கம் தலைமையில் நாங்கள் அனைவரும் தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவுகளைத் தட்டியும் பலன் கிடைக்காத நிலையில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள் தி.மு.க. பக்கம் சாய்வது, அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும் தஞ்சை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த இணைப்பு படலம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.