ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த ஷர்தா (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூன் 5-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், கடுமையான இரத்தப்போக்கு மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் சுமார் 20 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். முன்னதாக, ஜூன் 19-ஆம் தேதி ப்ரீத்தி (20) என்ற மற்றொரு பெண்ணும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இந்த மருத்துவமனையில் சிசேரியன் செய்துகொண்ட ஆறு பெண்கள் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையின் அலட்சியமே இந்த மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்பட்டதாகவும், பல உறுப்புகளின் செயலிழப்பே மரணத்திற்குக் காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தொடர் உயிரிழப்புகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
