பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 22 வயது இளம் பெண் பவானி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனது காதலர் சந்தன் என்ற சந்திரசேகருடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சந்திரசேகர் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடக்க, பவானி சடலமாக மீட்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்த சந்திரசேகரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தற்கொலை முயற்சி அல்ல என்றும், கொலையை மறைப்பதற்காக விஷம் குடித்து நாடகமாடியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில், இருவரும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஓராண்டுக்கு முன்பே ரகசியத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் ஒரு குழந்தை இருப்பதைக் மறைத்துள்ளார். இதற்கிடையில், பவானிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகளைச் செய்து, அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில், சந்திரசேகர் பவானியை விஷம் குடித்து தற்கொலை செய்ய வற்புறுத்தியுள்ளார். ஆனால், விஷம் குடித்த பவானிக்கு வாந்தி ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் அதிகளவு விஷத்தைக் குடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் திருமண நாள் புகைப்படத்தை சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை வைத்து, சந்தேகமடைந்த பெற்றோர் தேடிச் சென்றபோதுதான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
