ஹைதராபாத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது, கழிவறை பிளஷ் டேங்கிற்குள் மொபைல் போனை மறைத்து வைத்து காப்பி அடித்த மாணவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகன்னகூடா பகுதியிலுள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளது. தேர்வுக்கு முன்னதாகவே, அதாவது காலை 7 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்த அந்த மாணவர், சுற்றுச்சுவர் வழியாக கழிவறை  அருகே மொபைல் போனை மறைத்து வைத்துள்ளார். பின்னர் காலை 11 மணியளவில் கழிவறைக்குச் சென்று, அந்த போனை ஒரு ஜிப்-லாக் கவரில் போட்டு பிளஷ் டேங்கிற்குள் ஒளித்து வைத்துள்ளார்.

தேர்வின் போது, போலீஸாரின் இருகட்ட சோதனைகளையும் மீறி இந்த போன் கண்டறியப்படாமல் இருந்துள்ளது. தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர் திடீரென தனக்கு வயிற்று வலிப்பதாகக் கூறி கழிவறைக்குச் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர், ஊழியர்களை அனுப்பி பார்க்கச் சொல்லியுள்ளார்.

அப்போது அந்த மாணவர் பிளஷ் டேங்கில் மறைத்து வைத்திருந்த மொபைல் போன் மூலம் கூகுள் குரோமில் விடைகளைத் தேடிக் கொண்டிருந்தது அம்பலமானது. பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பொதுத் தேர்வுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.