பிஹாரில் திலகம் சடங்கு என்ற விழாவில் நடனமாடச் சென்ற இரண்டு பெண் கலைஞர்களை 13 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் பாட்னாவில் தங்கி நடனக் கலைஞர்களாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களை முன்னா குமார் என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாட முறைப்படி அழைத்துள்ளார்.

னால், குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், இரு பெண்களையும் திட்டமிட்டு ஆள்நடமாட்டமில்லாத தனிமையான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு இருவரையும் தனித்தனி அறைகளில் அடைத்து வைத்து, இரவு முழுவதும் துப்பாக்கி முனையிலேயே அந்த மிருகக் கும்பல் அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளது.

இதனை எதிர்த்த பெண்களை அக்கும்பல் கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. மறுநாள் காலையில், பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, புல்வாரி ஷெரீப் காவல் நிலையப் பகுதியில் வைத்து தங்களைக் காப்பாற்றுமாறு பெண்கள் சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளனர்.

இதைக் கேட்டு உஷாரான பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததைக் கேட்டு இரு பெண்களும் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்டமாக ஜீரோ எப்ஐஆர் (Zero FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் முன்னா குமார், சூரஜ் குமார் மற்றும் பானு குமார் ஆகிய மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற 10 பேரை வேட்டையாட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.