தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளப்பெருக்கு காரணமாக  குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தரப்பில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பொதுமக்களை அருவிப் பகுதிக்குச் செல்லாமல் தீவிரமாகத் தடுத்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Deena Vlog (@deena_vlog05)

இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் ஒரு நபர் எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசிய நபர், அருவியில் வெள்ளப்பெருக்குடன் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பாறை ஒன்று உருண்டு விழுந்ததாகவும், அதில் ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அருவிகளில் வெள்ள நிலைமை முழுமையாகச் சரியாகும் வரை யாரும் குளிக்க வர வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், இந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை எந்தளவிற்கு அதிகாரப்பூர்வமானது என்பது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தச் சம்பவம் குற்றாலம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.