ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் மற்றும் அவரது மனைவி லிலி சோரன் ஆகியோர் காட்டில் இலை சேகரிக்கச் சென்றபோது, ஆறு கரடிகள் கொண்ட கூட்டம் அவர்களைத் திடீரெனச் சூழ்ந்தது. எதிர்பாராத விதமாக ஒரு கரடி மால்டே சோரன் மீது பாய்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கியது.

தன் கணவன் உயிருக்குப் போராடுவதைக் கண்ட லிலி சோரன், அச்சத்தில் ஓடிவிடாமல் தான் கையில் வைத்திருந்த கோடரியால் கரடியுடன் துணிச்சலாகப் போரிட்டார். மனைவியின் அதிரடித் தாக்குதலால் மிரண்டு போன கரடிக் கூட்டம் அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடியது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மால்டே சோரன், உடனடியாக மீட்கப்பட்டு கியோன்ஜார் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் ஏற்கனவே யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் நிலையில், தற்போது கரடிக் கூட்டமும் மனிதர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கணவனைக் காப்பாற்றிய லிலி சோரனின் வீரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.