உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், தரம் குறைந்த கட்டுமானத்தால் அந்தத் தொட்டி இடிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு 2019-20 ஆம் ஆண்டில் மீண்டும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் இரண்டாவது தொட்டி கட்டப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தரையில் அப்படி ஒரு தொட்டியே இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
கிராமத்தில் ஆங்காங்கே குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வருவதில்லை.
தற்போது அந்த கிராமத்தில் திட்டத்தின் பெயர் மற்றும் செலவு விவரங்கள் அடங்கிய ஒரு பெயர் பலகை மட்டுமே மிஞ்சியுள்ளது. தண்ணீர் தொட்டி எங்கே போனது என்று தெரியாமல் கிராம மக்கள் வாளிகளுடன் காத்துக் கிடக்கின்றனர்.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரி யோகேந்திர பிரசாத்திடம் கேட்டபோது, முறையான பதில் அளிக்காமல் மழுப்பி வருகிறார். மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டும், ஒரு சொட்டுத் தண்ணீருக்குக் கூட மக்கள் அல்லாடும் அவலநிலை அங்கே நீடிக்கிறது.
அரசாங்கக் கோப்புகளில் மட்டுமே ஓடும் இந்தத் தண்ணீர், மக்களின் தாகத்தைத் தீர்க்கப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
