மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை மாமா அபகரித்துக் கொண்டதாகக் கூறும் அவர், இது தொடர்பாகப் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

வறுமையால் வாடும் தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்ததாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

பொது விசாரணையின் போது அதிகாரிகளைச் சந்தித்துத் தனது புகாரை அளித்த விவசாயி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிகாரிகள் அவரது மனுவை ஏற்றுக்கொண்டு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்த போதிலும், தனக்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் கிடைக்கும் வரை நிம்மதி அடையப் போவதில்லை என்று அவர் கூறினார்.

“>

 

ஒரு விவசாயி நீதிக்காகத் தரையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது, அங்குள்ள அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.