நேபாளத்தில் நிகழ்ந்த கோரப் பேரழிவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தப்பியோடிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவரவும் முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மீட்கப்படுவோருக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதையும் கண்காணிக்கவும் நான்கு அமைச்சர்கள் உடனடியாக டெல்லிக்குச் செல்லுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுப்பணித்துறை, பள்ளி கல்வித்துறை, உழவர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஆகிய அமைச்சர்கள் நேரில் சென்று இந்தப் பணிகளைக் கவனிக்கவுள்ளனர்.

“>

 

இதனிடையே, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் வதிவிட ஆணையர் ஆஷிஷ் குமார், IAS தலைமையில் சிறப்புக் குழு ஒன்று உடனடியாக நேபாளம் செல்லவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பேரழிவில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு எடுத்துவரும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.