அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவியேற்று சுமார் 6 மாதங்கள் ஆகியும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் மொஜ்தபா கமேனி தற்போது எங்கு இருக்கிறார், அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.
இந்த நிலையில், மொஜ்தபா கமேனி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். மொஜ்தபா கமேனி உயிரிழந்துவிட்டார் என்று தாம் நினைக்கவில்லை என்றும், அவர் மிகவும் கடுமையாக காயமடைந்திருக்கலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக அவரது உடலின் இடது பகுதி, முழங்கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மொஜ்தபா உயிருடன் இல்லை என்றால் ஈரான் மிகப்பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாதது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்ததாகவும், அதன் பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் அவர் தோன்றவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், டிரம்பின் தற்போதைய கருத்து இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேவேளையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் பலன் அளித்து வருவதாக கூறிய டிரம்ப், விரைவில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போவதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
