அமெரிக்காவைச் சேர்ந்த இந்து பூசாரி (பண்டிட்) ஒருவர், கனடாவில் வைத்து இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், ஓஷாவா பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் சிலர், தங்கள் வீட்டில் சிறப்பு ஆன்மீக பூஜை மற்றும் பரிகாரங்களைச் செய்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ராஜேந்திரநாத் துத்நாத் மராஜ் (50) என்ற பூசாரியை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.
பூஜை செய்ய வந்த அந்த நபர், தனது ஆன்மீக செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றத் தொடங்கியுள்ளார். அந்த இளம்பெண்ணை ‘துஷ்ட சக்திகள் மற்றும் பேய் பிடித்துள்ளதாகவும்’, அதிலிருந்து அவரை விடுவித்து குணப்படுத்த வேண்டும் என்றால் தனியாக ஒரு சிறப்புப் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய குடும்பத்தினரும், அந்தப் பெண்ணை பூசாரியுடன் அனுப்ப சம்மதித்துள்ளனர்.
தனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்தப் பூசாரி, ஆன்மீகச் சடங்கு நடத்துவது போல நடித்து அவரைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகாரின் பேரில், டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி, குற்றஞ்சாட்டப்பட்ட பூசாரி ராஜேந்திரநாத் துத்நாத் மராஜை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பூசாரி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, இவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து இதுபோன்ற ஆன்மீகச் சடங்குகளை நடத்தி வந்ததால், மேலும் பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த நபரைப் பற்றியோ அல்லது இதுபோன்ற சம்பவங்கள் குறித்தோ தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
