ஜப்பானில் கரடிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கரடிகளின் தாக்குதலில் 230-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 2025 ஏப்ரல் முதல் 2026 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 14,000-க்கும் மேற்பட்ட கரடிகள் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 12,000 ஆசிய கரடிகளும், 2,000 பழுப்பு நிற கரடிகளும் அடங்கும். இந்த நடவடிக்கை தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
கரடிகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் காடுகளில் கரடிகளின் முக்கிய உணவுகளான ஓக் மற்றும் பீச் மரங்களின் பழங்கள் சில பகுதிகளில் குறைந்துள்ளன. இதனுடன் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றமும் காடுகளில் உணவு கிடைப்பதை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதால் பல விவசாய நிலங்களும் தோட்டங்களும் பராமரிப்பின்றி உள்ளன. அங்கு கிடைக்கும் பழங்கள் மற்றும் தாவரங்கள் கரடிகளை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரடிகளை கட்டுப்படுத்துவதில் மற்றொரு முக்கிய சிக்கலாக பயிற்சி பெற்ற வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு உரிமம் பெற்ற வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கரடிகளை வேட்டையாடுவதற்கான விதிகளில் அரசு தளர்வு கொண்டு வந்துள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான கரடிகள் கொல்லப்பட்ட பிறகும் மனிதர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசின் நடவடிக்கைக்கு வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆசிய கரடி ஏற்கெனவே அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானில் சுமார் 42,000 ஆசிய கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், இந்த எண்ணிக்கை முழுமையாக உறுதியானது அல்ல என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிகளவிலான வேட்டை சில பகுதிகளில் கரடி இனத்தையே அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கு மாற்றாக, கரடிகளை கொல்லாமல் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து விரட்டும் முறையையும் சில இடங்கள் பின்பற்றுகின்றன. பயிற்சி பெற்ற நாய்கள் மூலம் கரடிகளை காட்டுக்குள் விரட்டுதல், தேவையான நேரங்களில் அவற்றை மயக்கி வனப்பகுதியில் விடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
