பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கத்தார் நாட்டின் முயற்சியால் கடந்த மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீறி பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நள்ளிரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. எல்லையோர மாகாணங்களான குனார், கோஸ்ட் மற்றும் பக்திகா ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, தலிபான்கள் தங்கள் நாட்டில் இயங்கி வரும் ‘தெஹ்ரிக் இ தாலிபான்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானின் 6 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொடூரமாகக் கொன்ற பயங்கரவாதக் குழுவிற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தாரர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வான்வழித் தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள அவர், பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு கூறுவது பொய்யான பிரச்சாரம் என்றும் சாடியுள்ளார்.